பன்னாட்டு பேச்சுப்போட்டியில் இந்தியா இரண்டாம் நிலை வெற்றி

இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்பாரதன் வெற்றி !

பன்னாட்டு மாணவர்களுக்கான ”பேசு தமிழா பேசு” போட்டி இலங்கையில் அண்மையில் நடைபெற்றது. மலேசியாவில் இயங்கிவரும் ‘ஆஸ்ட்ரோ வானவில்’ மற்றும் ‘வணக்கம் மலேசியா’ இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தேர்வுசெய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக மொத்தம் மூன்று மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் திருவாரூரில் இயங்கிவரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் த.க.தமிழ்பாரதனும் ஒருவர். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச்சுற்று என மொத்தம் மூன்று சுற்றுகளாக இந்தப் பன்னாட்டுப் போட்டி நடைபெற்றது. முதலிரண்டு சுற்றுகளில் வென்ற நான்கு மாணவர்கள் இறுதிச்சுற்றில் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் சார்பில் பங்கு கொண்ட மாணவர் தமிழ்பாரதன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் இந்தியா, இலங்கை, மலேசியா(2) நாடுகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இறுதிச்சுற்றின் நிறைவில் இந்தியா சார்பில் பங்குகொண்ட த.க.தமிழ்பாரதன் இரண்டாம் நிலை வெற்றி (second runnerup) பெற்றார். அவருக்கு 2,000 மலேசிய ரிங்கிட்ஸ் பணம், வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இரண்டாம் நிலை வெற்றிபெற்ற மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ கமலநாதன், இலங்கை இராஜங்க கல்வி அமைச்சர் மாண்புமிகு இராதாகிருஷ்ணன், அரச கர்ம மொழிகள் அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
இந்தியாவிற்கு வெற்றியோடு திரும்பிய அம்மாணவருக்கு தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஏ.பி.தாஸ், பதிவாளர் முனைவர் புவனேஸ்வரி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.வேல் முருகன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்
இதுகுறித்து தமிழ்பாரதன் கூறுகையில்,
இதுவரை மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாலும், நம் பாரத நாட்டின் சார்பில் இந்தியாவிற்காக களமிறங்குவது இதுவே முதன்முறையாகும். இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் முன்பு எல்லாரும் தெரிவித்து வாழ்த்துகளால் திக்குமுக்காடிப் போனேன். நாம் இந்தியாவின் சார்பில் களமிறங்குகிறோம், நாம் பெறுகிற வெற்றி - நம் தேசத்தின் வெற்றி, என்பதால் முழு முயற்சியோடு பேசச் சென்றேன்.
முதல் சுற்றில் “தமிழா தயக்கமா” எனும் தலைப்பில் பேசினேன். இரண்டாம் சுற்று நேரடி விவாதம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்றது. நான் “இளைஞர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்” எனும் தலைப்பில் பேசினேன். அதில் வெற்றி பெற்றதால் இறுதிச்சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இறுதிச் சுற்றில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஒரே நபர் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உத்வேகம் அதிகரித்தது. “தற்காலப் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக முக்கியத்துவம் தருவது பணம்-படிப்பு-பண்பு-அழகு” எனும் இறுதிச் சுற்றில் “படிப்பு” எனும் தலைப்பில் அதற்கானத் தரவுகளை முன்னிறுத்திப் பேசினேன்.
மிகச்சிறப்பாக அனைத்துப் போட்டியாளர்களும் பேசினர். இதில் இரண்டாம் நிலை வெற்றியாளராக (2nd runnerup) வந்தது மிக மகிழ்ச்சியான தருணம். இந்தப் பன்னாட்டுப் போட்டியை என் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கான அடித்தளமாகவே கருதுகிறேன்.
இதனைப் போட்டி என்பதை விட பன்னாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கான ஒன்றுகூடலாகவே கருதினேன். கடல்கடந்த நாடுகளில் இருக்கக்கூடிய தமிழ்ச் சொந்தங்களுக்கிடையே இருக்கும் பிணைப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்