புலம்பெயர்ந்த சிறுவர்கள்: அரவணைத்து கொண்ட சுவிஸ் குடும்பம்
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய போது பெற்றோரை பிரிந்த இரண்டு சகோதரர்களை சுவிஸில் வாழும் குடும்பம் ஒன்று தங்களுடன் தங்க வைத்து கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமீத் மற்றும் கலீல் மஜிடி ஆகிய இரு சகோதரர்களும் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடந்த வருடம் தங்கள் பெற்றோருடன் வெளியேறினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பெற்றோரை பிரிந்த அவர்கள் சமூக தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சுவிற்சர்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.
கடந்த வருடம் சுவிற்சர்லாந்துக்கு புலம்பெயர வந்த 1997 சிறுவர்களில் ஹமீத் மற்றும் கலீலும் அடக்கம். கடந்த 2010ல் வெறும் 235 சிறுவர்கள் புலம்பெயர சுவிஸ்க்கு வந்த நிலையில், இது பல மடங்காக கடந்த இரு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. சுவிஸில் உள்ள பல மண்டலங்களில் புலம்பெயரும் சிறுவர்களுக்காக மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், ஹமீத் மற்றும் கலீலை சுவிஸில் வாழும் குடும்பம் தங்கள் வீட்டில் தங்க அனுமதி கொடுத்துள்ளனர். தற்போது சகோதரர்கள் இருவரும் பிரிந்த தங்களின் பெற்றோரை கண்டுபிடித்து அவர்களுடன் போன் மூலம் பேசி வருகிறார்கள். ஆனாலும், சுவிஸில் தற்காலிகமாக தங்கும் அனுமதியை பெற்றுள்ள இருவரும் தங்களை தங்க அனுமதித்த குடும்பத்துடனே வாழ்ந்து கொண்டு பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

Comments
Post a Comment