லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை : சிறுமியின் வீரச்செயல்
உ.பி., மாநிலம், மீரட் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் சீமா கவுசிக். கணவர் வரதட்சணை கொடுமை செய்ததால், சீமா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான அவரது கணவர் சஞ்சீவ் குமார், அவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமாவின் தந்தை சாந்தி ஸ்வரூப் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், சஞ்சீவ் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்களை கைது செய்ய, போலீசார் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சாந்தி ஸ்வரூப், சீமாவின் ஆறு வயது மகள் மான்வியுடன் மீரட் போலீஸ் ஐ.ஜி., ராம்குமார் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது சிறுமி மான்வி கையில் ஒரு உண்டியல் இருந்தது. மக்கள் குறை கேட்டுக் கொண்டு இருந்த ஐ.ஜி., சிறுமியை அழைத்து விசாரித்தார்.
அதற்கு சிறுமி மான்வி, ' என் தாய் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் லஞ்சம் கேட்கின்றனர். எனவே, என் உண்டியல் பணத்தை லஞ்சமாக எடுத்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மழலை குரலில் கூறினாள். இதை கேட்டு அதிர்ந்து போன ஐ.ஜி., கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி, சிறுமியை அனுப்பி வைத்தார். மேலும், லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Comments
Post a Comment