"ஆயுதங்களே!போர்ப்படைகளே!மரணித்திடுங்கள்!"
ஆயுதங்களே! போர்ப்படைகளே!
உங்கள் மூதாதையர் கதை தெரியுமா?
முடிமன்னன் முடிசூட இடை தறித்த
உடைவாளின் கதை அறிவாயா?
காலத்தின் சாட்சியாய் வீரத்தின் நீட்சியாய்
கண்காட்சியாய் அருங்காட்சியகத்தில்.
உன்னத வீரர்களின் குருதி குடித்த கூர்ஈட்டி
இன்று எறியும் வீரனின் கீர்த்தி விருதுக்கான விளையாட்டானது.
இருமருங்கும் படையோடு வீரர்வரினும்
திணறடித்து தலைமிதித்த யானை கதை தெரியுமா?
கோவில் கவளத்திற்கு வீதி உலா வருகிறது
பிச்சை ஏந்தும் துதிக்கையுடன்.
குளம்படி தொடுத்து வெற்றி கனைத்த குதிரை கதை தெரியுமா?
கடற்கரை மணலில் சவாரி போகிறது.
இன்றைய ஆயுதங்களே போர்ப்படைகளே மரணித்திடுங்கள்.
சுட்டு வீழ்த்தி திசுத்துளையிட்ட துப்பாக்கியே!
கால்சட்டை துளையிட்டு வடிவமைப்பு படைக்கப் போகிறாய்.
கொத்துகொத்தாய் வீழ்த்தி தள்ளிய பீரங்கியே!
உனது சேவை இனி ராணுவ மரியாதைக்கு மட்டும்தான்.
குண்டுகளை மழைசொரிந்த வான்படையே!
நீ கல்யாண மேடைகளில் பூ பொழிய பழகிவிடு.
கடல் நடுவே எதிரிகளை மூழ்கடித்த கப்பற்படையே!
உன் உதிரிபாகங்கள் உருக்கு ஆலையில் பயன்படட்டும்.
காலம் மாறுகிறது.உங்கள் காலம் முடிவடைந்தது.
ஆயுதங்களே! போர்படைகளே! மரணித்திடுங்கள்.
ஒரே நொடியில் பூமி துளைத்து புது பூமி படைக்க
அணுஆயுதம் வந்துவிட்டான்.அவன் காலமிது.
எழுத்து : ஜோரிகி

Comments
Post a Comment