ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா


ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசன் ஒருவன் அன்னை ஆதிபராசக்தி மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். அன்னையை நினைத்து பல ஆண்டுகள் தவம் செய்து வந்தான். மன்னன் தவத்தை மெச்சிய அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான ஆதிபராசக்தி அவன் முன் தோன்றி தவத்தை கைவிடுமாறும், நான் பேழையில் இருந்தே அருளுவேன்., என்னை எழுந்தருளச் செய்து, ஒவ்வொரு நாளும் அளவில்லா நைவேத்தியத்தை படைத்து வழிபடு. முடிவில் உனக்கு பெருவாழ்வு கிட்டும் என கூறி மறைந்தாள். அதன்படி மன்னன் கண்முன்பு பெட்டி ஒன்று இருந்ததைக் கண்டு அன்னையின் கருணையைக் கண்டு கசிந்து உருகினான் . பெட்டியில் இருந்த அம்பாளை எழுந்தருளச் செய்து, கனி வகைகள், மலர்கள், பதார்த்தங்கள், ஆயிரமாயிரம் எண்ணிக்கையில் வைத்து படைத்து வணங்கி வந்தான். ஒவ்வொரு நாளும் இது போன்று செய்து வந்த மன்னனின் முன்பு தோன்றிய அன்னை, ”உன் வழிபாடு முடிந்துவிட்டது, மீண்டும் பெட்டியில் வைத்து கடலில் விட்டுவிடு. நீ வீட்டுபேறு பெறுவாய்” எனக் கூறி மறைந்தாள். அன்னை கூறியவாறு : அம்பாள் வீற்றிருக்கும் பெட்டியைக் கடலில் விட்டுவிட்டான். இது நீண்ட நாள்களாகக் கடலில் மிதந்தபடி, திருமலைராயன்பட்டினம் கடல் பகுதிக்கு வந்துள்ளது. கட்டுமரத்தில் மீன்பிடிப் பணியில் ஈடுபட்டோர், பெரும் புதையல் கிடைத்ததாக எண்ணி வலையைப் பெட்டியின் மீது வீசினர்.
பெட்டி அவர்களுக்கு அகப்படாமல் விலகிக்கொண்டே இருந்துள்ளது. பலரும் கடலுக்கு சென்று பெட்டியை வசப்படுத்த முயன்று தோல்வி கண்டனர். திருமலைராயன் பட்டினத்தில் கைக்கோளர் என்ற மரபைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்துவந்தனர். இந்த மரபைச் சேர்ந்தவர்களுள் ஒருவரின் கனவில் தோன்றிய அன்னை,. ”கடலில் தவழ்ந்து கொண்டிருக்கும் தன்னை வந்து அழைத்து ஊரில் நிலைப்படுத்தி நிறைவான வாழ்வைப் பெறுவாயாக” எனக்கூறி மறைந்தாள்.
இந்த மரபினர் சிரத்தையுடன் அன்னையின் திருப்புகழைப் பாடிக்கொண்டு கடற்கரைக்குச் சென்றனர். அவர்கள் முன்பு பெட்டி நெருங்கி வந்தது கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர்.பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வந்து மரபினர் வாழும் பகுதியில் சேர்த்தனர். பெட்டியைத் திறந்தபோது அம்பாள் இருந்ததைக்கண்டு ஆனந்தமடைந்தனர். அதில் இருந்த ஓலைச்சுவடியில் மேற்கண்ட குறிப்புகள் இருந்ததையும் குறிப்பின்படி வழிபாடுகள் செய்யத் தொடங்கலாயினர்.
பல ஆண்டுகால பாரம்பரியமாக அம்பாளை ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை பேழையிலிருந்து எழுந்தருளச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எழுந்தருளும்போது, பல்வேறு பழங்கள், பதார்த்தங்கள், மலர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நைவேத்தியப் பொருள்கள், பக்தர்களுக்கு விநியோகிக்கும் பொருள்களை வைத்து படையலிட்டு வருகின்றனர்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா கடந்த 2012ஆம் ஆண்டு பூஜை விழா கடைசியாக நடந்தது. அதன்பிறகு திங்கள் கிழமை ஜூன் 5ஆம் தேதி இரவு பேழை திறந்து அம்பாளை எழுந்தருளச் செய்தலுடன் 2017 ஆம் ஆண்டுக்கான பூஜை விழா தொடங்கியது.கோயில் பூசை விழா, வரிசை, புறப்பாடு நிகழ்ச்சியுடன் நேற்று 06.06.2017 செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.
புகைப்படம் எடுக்கமுடியாத தெய்வம் :
ஆயிரங்காளியம்மன்னைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது கண்டு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அப்போதைய பிரெஞ்சு உயரதிகாரி ஒருவர் பூஜை விழாவின் போது அம்பாளைக் காணச் சென்றார். அம்பாளை புகைப்படமெடுக்கக் கூடாது என்பது பொது விதியாக உள்ள நிலையில் புகைப்படம் எடுக்கக் கோயிலாரிடம் அனுமதி கோரினார். கோயிலார் தயங்கிய நிலையில், கையில் கொண்டுவந்த புகைப்பட சாதனத்தின் மூலம் படம் எடுத்துள்ளார். பின்னர் படச்சுருள்கள் அனைத்தும் வீணாகியிருந்தது கண்டு, அன்னையின் மகிமையை உணர்ந்து செய்த பிழைக்கும் மன்னிப்புக்கோரி மண்டியிட்டு ஆறுதல் பெற்றார்.
இந்த நிகழ்விலிருந்து இன்று வரை அம்பாளை புகைப்படம் எடுக்கக் கோயிலார் அனுமதிப்பதில்லை. பக்தர்களின் ஒத்துழைப்பும் இருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீ ஆயிரங்காளியம்மனை நேரில் மட்டுமே தரிசிக்க இயலும். 2017 ஆம் ஆண்டிற்கான விழா தொடங்கியது., பக்தர்கள் பார்க்க முடியாத வகையில் திரைகளிடப்பட்டிருந்தது. திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை முழுவதும் அலங்காரப் பணிகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பானைகளில், செவ்வாய்க்கிழமை காலை கோயில் அருகே பொங்கல் வைத்து கோயில் நிர்வாகத்தினரிடம் பக்தர்கள் ஒப்படைத்தனர். சுமார் ஆயிரம் பொங்கல் பானைகள் கோயிலில் வரிசை வரிசையாக வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வரிசை புறப்பாடு நடைபெற்றது.
ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் என்ற பெயருள்ளதால் அம்பாளுக்கு எல்லா பழ வகைகளும், பதார்த்தங்களும், பூசைப் பொருள்களும் ஆயிரக்கணக்கானவையாக ஏற்பாடு செய்யப்பட்டு வரிசை, டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் மூலம் வீதியுலாவுக்கு புறப்பாடு செய்யப்பட்டிருந்தன.பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பழங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயிரக்கணக்கான எண்ணிக்கை கொண்ட பொருள்கள் அனைத்தும் தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன் மற்றும் வியாழக்கிழமை பகல், இரவு முழுவதும் அம்பாளை தரிசனம் செய்ய முடியும். வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அம்பாளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.இதைத் தொடர்ந்து, அம்பாளை மீண்டும் பெட்டியில் ஸ்தாபிதம் செய்யப்படுகிறது. விழாவையொட்டி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம், அரசுத் துறைகளுக்கு புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு :த.க.தமிழ்பாரதன்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்