”அவளோடு இணைந்தால் அம்மா என்னைக் கொன்னுடுவாள்.,” - கதை



கடைசியாக அவளை எந்த நாள் பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை.தினமும் நினைவலைகளில் வந்து போவதால் கூட மறந்து போய் இருக்கலாம்.பார்க்கும் போதெல்லாம் ஒரு பரபரப்பு.அணைத்துவிட துடிக்கும் மனது.அவள் பேசி கேட்டதில்லை என்றாலும் கேட்டுவிட தவம் இருந்ததால் இயற்கை கூட மனம் இரங்கி இசை கச்சேரி நடத்தியது.ஆனால் அவள் சட்டை செய்யவில்லை.காரியக்காரி தான்.
அவள் அண்ணன்மார்களைப் பற்றி கூறியாக வேண்டும். ஒருவனின் பராக்கிரமமும் மினுமினுப்பும் பார்ப்பவரை அஞ்சவைக்கும்.மற்றவனின் அதட்டல்சத்தம் குலைநடுங்கச் செய்யும்.பலரும் அவள் அண்ணன்களுக்குப் பயந்தே அவளை எதிர்நோக்க அஞ்சுவர்.நானும் கூட.அவள் தனிமை வேளைகளில் அங்கம் வகிக்க எண்ணி என் தனிமைகளில் தொலைந்தது தான் மிச்சம். அவளை பார்ப்பதே ஏழை ஒருவனின் திருமலை தரிசனம் என்றிருக்கும் போது தனிமையை எதிர்பார்த்தது மடத்தனம் தான். அடையாத வரை அவள் பொதுவானவள் என்றாலும் அவள் பிம்பம் விழுந்த கண்களை கொய்து விடும் கோபம் வருகிறது.கையாலாகாதவனின் கோபம் யாரை என்ன செய்யும். முடிந்தவரை என் கண்களை மூடிக் கொள்கிறேன்.காதலர்கள்,தம்பதிகள் கதவை மூடுவது போல என் கண்களை மூடுவதும் அவளை புணர்ந்துவிடும் பாக்கியம் அளிக்கிறது.
சிறுவயதிலிருந்தே அவளைப் பார்க்கிறேன்.அம்மாவின் இடுப்பில் அமர்ந்து சோறுண்ணும்போது சன்னல் கம்பிகளின் வழியே சில நாட்களில் கண்டதுண்டு அவளை.என் பிஞ்சுவிரல் தீண்ட முற்படும் போதெல்லாம் என் அன்னையின் அதட்டல் என்னை அழவைத்து விடும் அவளை நெருங்கவிடாமல்.அவளை எண்ணியவாறு கனவுகளோடு நானும் வளர்ந்துவிட்டேன்.சமீபகாலமாக அவளைப் பார்க்க முடியவில்லை.என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.அவள் அழகை ஆராதிக்கும் ஆட்கள் இந்த பூமியில் இல்லை என்பதாலா?இருக்கலாம்.எனக்காகவாவது அவள் வரலாம்.இன்றும் கூட நான் அவளை இணைவேனா என் காதல் கூடுமா என்று தெரியவில்லை.அவளை மறக்கவும் முடியவில்லை.என் தாயின் கண்டிப்பான அன்பு என்னை என் மனதின் பேச்சை கேட்கவிடாமல் செய்கிறது.அவளைப் பற்றி எழுதும் இந்த வேளையிலும் சன்னம் கம்பிகளின் வழியே அவளது முகப் பிரகாசத்தைப் பார்க்கிறேன்.கட்டியணைத்து காதலை சொல்லிவிடலாமா? இப்பொழுதும் அம்மாவின் குரல் செவிகளைத் தாக்குகிறது,"மழைல நனைஞ்சனு வச்சுக்க கொன்னுபுட்டேன்".

எழுத்து : சக்தி, தமிழ் பரதன்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்